550. திரும்பிப் பார்த்த நதிகள், திகைத்து நின்ற ஆந்திரம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கி.அ.அ.அனானியிடமிருந்து ஒரு மேட்டர் மெயிலில் வந்தது. சமீபத்திய நிகழ்வொன்றினால் தமிழ் வலைப்பதிவுலகு அல்லோலகல்லோலப்படும் நேரத்தில் 'இதென்ன கலாட்டா' என்று பிரித்து வாசித்தால், ஆச்சரியம். ஆந்திரா வெள்ளச் சேதம் பற்றி கி.அ.அ.அ எழுதியிருப்பது கண்டு அதிர்ச்சி :-) நல்ல அலசல் என்று தோன்றியதால், அதை உடனே பதிப்பிக்கிறேன். நன்றி.
எ.அ.பாலா
*********************************************
இயற்கையின் சீற்றத்தை மனிதன் ஓரளவிற்கு மேல் தடை போட்டு விட முடியாதுதான்.ஆனால் வரும் செய்திகளைப் பார்த்தால் பேராசையினால் நாமே இந்த இயற்கையின் சீற்றங்களுக்கு துணை போய்,தூண்டுகோலாய் இருந்து அழிவை மேலும் பேரழிவாக்கிக் கொள்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
குறிப்பாக ஆந்திராவில் இந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தினால் ஆந்திர கர்நாடக மாநிலங்களில் 250 பேருக்கு மேல் பலி ,15 லட்சம் பேர் வீடிழப்பு மற்றும்15000 கோடி அளவிலான பொருட்சேதம் முதலியவற்றிற்குக் காரணம், மழை மற்றும் இயற்கையின் சீற்றம் என்பதை விட அரசியல்வாதிகளின் பேராசையும் ஆட்சியாளர்களின் அசட்டையும் கவனக் குறைவும் என்று வரும் செய்திகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன.
ஒரே நாளில் கிட்டத்தட்ட 8 லட்சம் கியூசெக் நீரை வெளியேற்றியது. இப்படி அதிரடியாக வெளியேற்றப்பட்ட உபரி நீரும் தொடர் கனமழையும் வட கர்நாடகத்தின் பிஜாபூர்,பகல்கோட் மற்றும் பெல்லாரி மாவட்டங்களை வெள்ளக் காடாக்கியது.அதோடு நில்லாமல் உபரி வெள்ளம் ஆந்திராவினுள்ளும் புகுந்தது. ஆனால் "இந்த கட்டுக்கடங்காத வெள்ளத்திற்கு முக்கிய காரணம் மழைக்கு முன் கர்நாடகா அல்மாட்டி அணையை கழுத்து வரை முட்ட முட்ட நீரை நிரப்பி வைத்திருந்ததுதான் .அதனால்தான் மழை அதிகரித்த போது அணையை ஒரு சேரத் திறந்து உபரி நீர வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது" என்கிறர்கள் நிபுணர்கள். ஆனால் " மஹாராஷ்டிரத்திலும் பெய்த கனமழைதான் இப்படி உடனடி அணை திறப்பிற்கு வித்திட்டு விட்டது, இல்லையேல் அணைகளே உடைந்து விடக் கூடிய பேரபாயத்திலிருந்து தப்பிக்கவே இப்படி திறந்து விட்டோம் " என்று சப்பைக் கட்டு கட்டுகிறது கர்நாடக அரசு.
உண்மை எதுவாக இருந்தாலும் இந்த உபரி நீரினால் சீறிப் பாய்ந்த கிருஷ்ணா நதி ஆந்திராவில் ஸ்ரீசைலத்தை ( ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்குக் குறுக்கே அணை கொண்ட முதல் நகரம் ) அடைந்த போது தான் பேரழிவு காத்திருந்தது.பொதுவாக இப்படிப் பட்ட அதிக மழை, வெள்ள காலங்களில் அதற்கேற்றவாறு அணைகளில் நீர் தேக்கத்தை அமைத்துக் கொள்ள மத்திய நீர் ஆணையம் நதிகளில் வெள்ள நீர்வரத்து மற்றும் அளவுகள் குறித்து அறிக்கை வெளியிடும்,. ஆனால் இதைக் கண்டு கொள்ளாத ஸ்ரீசைலம் அணை நிர்வாகம் அணையிலிருந்து நீரை வெளியேற்றாவே இல்லை.இதில் கொடுமை என்னவென்றால் இப்படி முதலிலேயே நீரை வெளியேற்றியிருந்தாலும் அது வீணாகியிருக்காது.அடுத்ததாக இருந்த வெள்ளத்திற்கு முன் பாதி கூட நிரம்பாத நிலையில் இருந்த நாகார்ஜுனசாகர் அணையில் சென்று தேங்கியிருக்கும் .
பிறகு ஏன் ஸ்ரீசைலம் அணையைத் திறந்து விட இத்தனை காலதாமதம்? இதற்கு மற்றெல்லாவற்றையும் விட முழு முதல் காரணம் ஆந்திராவின் பாழாய்ப்போன அரசியல்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆந்திராவின் முந்தைய இரண்டு முதலமைச்சர்களான மறைந்த ராஜசேகர ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள்.கிருஷ்ணா நதியின் அருகில் இல்லாத இந்த ராயலசீமா பகுதிக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு செல்லவேண்டும் என்ற இவர்களது ஆசைதான் ஸ்ரீசைலம் அணையில் ஏற்கனவே நீர் ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்டதற்க்கு அதிகமாக நீரைத் தேக்கச் சொல்லும் அரசாணையை வெளியிட வைத்தது என்கிறார்கள். மேலும் குறிப்பாக ராஜசேகர ரெட்டியின் பேராசைக்குக் காரணம் ராயலசீமா பகுதிக்கு குடிநீர் என்பதற்கும் மேலாக தன் மகன் ஜகன் மோகன் ரெட்டி பினாமி பங்குதாரராக இருக்கும் ப்ராமணி உருக்காலைக்கு தண்ணீர் தரவே இந்த ஏற்பாட்டை செய்தார் என்றும் சொல்கிரார்கள்.( இது ஆந்திர சட்டசபையிலும் பெரும் அமளியை முன்னர் கிளப்பியதை பலரும் அறிந்திருக்கலாம்)
இப்படி அளவுக்கதிகமாக சேமிக்கப் பட்ட நீரால் தளும்பிக் கொண்டிருந்த ஸ்ரீசைலம் அணையில் , வெள்ளப் பெருக்குடன் மோதிய கிருஷ்ணாநதி மேலும் முன் செல்ல முடியாமல் மோதிய வேகத்தில் பின்னோக்கிப் பாய ஆரம்பித்தது.முதலில் 150 கி.மி தள்ளியிருந்த கர்னூலை தாக்கிச் சூழ்ந்தது.கர்னூலில் அருகேதான் கிருஷ்ணா நதியும் துங்கபத்ரா நதியும் சங்கமிக்கின்றன.இப்படி முன்னேர முடியாமல் பின்னடைந்த கிருஷ்ணாவின் வேகத்தைத் தங்காமல் ஏற்கனவே வெள்ளப் பெருக்குடன் ஓடிய துங்கபத்திரையும் முன்னே பாய முடியாமல் தத்தளித்தது.
விளைவு , கிருஷ்ணா நதி கர்னூலை மூழ்கடித்தது. நகரம் முழுவதும் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்து மூன்றடுக்குக் கட்டடங்களைக் கூட விட்டு வைக்காமல் மூழ்கடித்தது. அத்தோடு நிற்கவில்லை அவலம்..முன்னேர முடியாத துங்கபத்திரை பின்னோக்கிப் பாய்ந்து கரையிலிருந்த கிராம, நகரங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. அதில் முக்கிய நகரம் ராகவேந்திரர் முக்தி பெற்ற திருத்தலமான மந்திராலயம்.இந்த ஊரில் அமைந்த ராகவேந்திரர் கோவிலின் மடாதிபதியை மூன்றாம் மாடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றுமளாவு வெள்ளம் சூழ்ந்ததை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.அதனோடு நில்லாமல் கர்நாடகாவில் வளமான ராய்சூர் பகுதியையும் முழுமையாக மூழ்கடித்து நாசப் படுத்தியது பின்னோக்கி நகர்ந்த துங்கபத்ரா நதி.
ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ரோசையா, " அணைகளைத் திறந்து விட்டு, பின் மழை போதிய அளவு பெய்யாமல் அணை நிரம்பவில்லை எனில் அதற்கும் எங்களைத்தான் குறை சொல்வார்கள் " என்று சொல்லி அணைகளில் அதிக நீர் சேமித்ததையும், சரியான நேரத்தில் திறக்காததையும் ஞாயப்படுத்துகிறார். ஆனால் " மழை சீராக 15 முதல் 20 செ.மி அனைத்துப் பகுதிகளிலும் பெய்ததால் ,முதல்வர் ரோசையா சொல்லும் நிலை கண்டிப்பாக வந்திருக்க வாய்ப்பே இல்லை, "என்கின்றார்கள் நிபுணர்கள்.
வேறு வழியில்லாமல், ஸ்ரீசைலம் அணை திறந்து விடப்பட்ட போது ( இதில் நீண்ட நாள் திறக்காததால் ஒழுங்காக பராமரிக்கப் படாத சில மதகுகள் சரியான நேரத்தில் திறக்காமல் காலை வாரி விட்டது உபரித் தகவல்- கண்டிப்பாக இந்த மதகுகளைப் பராமரித்ததாக கணக்குக் காட்டி சில பல லட்சங்களை சில அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் விழுங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!!!)
ஒரு வழியாக மதகுகள் திறக்கப் பட்டதும் ,வெள்ளம் பெருக்கெடுத்த கிருஷ்ணா நதி குண்டூர் மற்றும் விஜயவாடாவை அடைந்த போது நேராகப் போய் கடலில் கலக்காமல் , பக்கக்கரைகளை உடைத்துக் கொண்டு ஆயிரக் கணக்கான விளைநிலங்களை மூழ்கடித்து அங்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.இதற்குக் காரணம், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச நீர் எடுப்பதற்காக நதியிலிருந்து நேரடியாக பைப்புகளப் பதிக்கக் கரைகளைத் தோண்டி பலகீனமாக்கி விட்டதுதான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்-தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையைக் கட்டிக் கொண்டு காசு பார்த்ததின் விளைவுதான் இது .
அடுத்ததாக கிருஷ்ணா நதி வங்கக் கடலில் கலக்கும் இடத்திற்கு அருகில் ரேப்பள்ளி என்ற இடத்தில் சில சமூக விரோதிகள் தங்கள் இடங்களுக்குத் தண்ணீர் புகுவதைத் தடுக்க கரைகளை உடைத்ததால் அங்கும் வெள்ளக்காடு என்பது அடுத்த சோகம்.இதை அரசு இப்போது தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது!!!!.
இப்படி ஒட்டு மொத்த அசிரத்தையாலும், அசட்டையாலும் ,பேராசையலும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட பேரிழப்புகளை தேசிய சோகம் என்று சொல்வதை விட தேசிய அவமானம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
Tail piece :சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய மழை தொடங்கிய போது அதே பகுதியில் மழை வருவதற்காக ஆந்திர அரசு நிறுவனமொன்று "க்ளவுட் சீடிங்" என்று சொல்லக் கூடிய மழை விளைவிக்கும் காரியத்தைச் ( இதற்கும் , பெய்த மழைக்கும் தொடர்பில்லை என்றாலும்) செய்து கொண்டிருந்தது என்பது நல்ல நகை முரண்.
(படித்த செய்திகளிலிருந்தும் (குறிப்பாக Times of India) மற்றும் விசாரித்து அறிந்த செய்திகளிலிருந்தும் தொகுக்கப்பட்டது)
கி.அ.அ.அனானி
26 மறுமொழிகள்:
டெஸ்ட் !
//அதில் முக்கிய நகரம் ராகவேந்திரர் பிறப்பிடமான மந்திராலயம்.இந்த ஊரில் அமைந்த ராகவேந்திரர் கோவிலின் மடாதிபதியை மூன்றாம் மாடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றுமளாவு வெள்ளம் சூழ்ந்ததை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்///
சமீபத்தில் மந்திராலயம் சென்றிருந்தப்போது அகலமான துங்கபத்திரா நதியினை நீரின்றி பார்த்து ஆச்சர்யப்பட்டேன்!
வெள்ளக்காடாக மாறியதை செய்திகளில் பார்த்து வியந்துதான்போனேன் எவ்வளவு வெள்ளம் சூழ்ந்திருக்கிறது ? :(
//கண்டிப்பாக இந்த மதகுகளைப் பராமரித்ததாக கணக்குக் காட்டி சில பல லட்சங்களை சில அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் விழுங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!!!)
/
நிச்சயமாக!
வருடாவருடம் மெயிண்டெனஸ் எஸ்டிமேட்டுன்னு போட்டு தாக்குவாங்க! இது நம்ம ஊரு ஸ்டைல் அங்கேயும் இப்படித்தானே இருக்கும்..?! :)
//விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச நீர் எடுப்பதற்காக நதியிலிருந்து நேரடியாக பைப்புகளப் பதிக்கக் கரைகளைத் தோண்டி பலகீனமாக்கி விட்டதுதான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்-தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையைக் கட்டிக் கொண்டு காசு பார்த்ததின் விளைவுதான் இது .//
இது எல்லா இடத்திலயும் நடக்கிறதுதான் :( நம்ம ஊருல வெள்ளம் வந்தாலும் இதே கதைதான் நடக்கும்!பிறகு வெள்ள நிவாரணம் சுருட்டல் தான்!
அன்புள்ள பாலா
(வழக்கம் போல்) பதிவைப் பதிப்பித்தமைக்கு( வழக்கம் போல்) நன்றி
கி அ அ அனானி
ஆயில்யன்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
கட்டுரை பற்றியும் எழுத்து நடை, கட்டுரையின் நீளம், டாபிக் போன்றவற்றில் உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். அடுத்தடுத்து எழுதும் போது தவறுகளை களைய ஏதுவாகும்.
கி அ அ அனானி
நல்ல பதிவு, பகிர்வு.
உங்க ”ஆய்”யங்கார் நண்பர் ரோசா கீழ்தரமாய் நடந்து கொண்டதை கண்டிக்காமல் திசை திருப்பவே இந்தப் பதிவு.
அன்புடன் அருணா
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி
கி அ அ அனானி
/// Anonymous said...
உங்க ”ஆய்”யங்கார் நண்பர் ரோசா கீழ்தரமாய் நடந்து கொண்டதை கண்டிக்காமல் திசை திருப்பவே இந்தப் பதிவு.///
வாங்க சக அனானி
எ அ பாலாவை நோக்கி இந்த கணை என்று நினைக்கிறேன்.உங்கள் புரிதலுக்காக சில விஷயங்கள் பிரத்தியேகமாய் :)
இது பாலாவுடைய பதிவு அல்ல.
பதிவின் பேசு பொருள் உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்.
பரவாயில்லை , எல்லாருக்கும் எல்லாமுமா புரிந்து விடும்.
எ அ பாலா எதையோ பற்றி எழுதாதது பற்றி உங்களுக்கு மிகவும் அரிக்கிறது.அந்த அரிப்பிற்கு, எங்கு யார் சொரிந்து விட்டுக் கொண்டிருக்கிறார்களோ அங்கே போய் வைத்துக் கொள்ளுங்களேன் உங்கள் ஜால்ராவை( எ அ பாலா எழுதவில்லை என்று அங்கலாய்ப்பது முதற்கொண்டு ).
" என் " பதிவில் அதுவும் சிறிதளவு கூட் சம்மந்தம் இல்லாத இந்தப் பதிவில் வேண்டாம்
புரிந்து கொண்டதற்கு நன்றி.
யார் தவறு செய்தாலும் கண்டிக்கும் நீங்கள் "ரொம்ப நல்லவராக" இருப்பதால் உங்களைத் திட்ட மனமில்லை.:)
கி அ அ அனானி
சிலரது சுயநலத்திற்காக எத்தனை விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதைப் படிக்கும் போதே மனம் பதைக்கிறது.
//இயற்கையின் சீற்றத்தை மனிதன் ஓரளவிற்கு மேல் தடை போட்டு விட முடியாதுதான்.//
:)
இங்கே மட்டும் ஏன் 'எல்லாம் (அ)வன் செயல்' என்று எழுதுவதற்கு முடிவதில்லை ?
கி அ அ அனானி அய்யா,
என்னது நதி திரும்பி பார்த்ததா?ஆந்திரம் திகைத்து நின்றதா?நினைத்தாலே குலை நடுங்குதப்பா.நம்ம ஊர்ல கூவம் திரும்பி பாத்தா எம் மக்களால் திகைத்து நிறக முடியுமா என்ன?பதை பதைத்து அல்லவா ஓட வேண்டியிருக்கும்.
நல்ல வேளை;தமிழ் நாட்டில் கூவம் மட்டும் தான் ஒரிஜினல் திராவிட தமிழ் நதி.ஏனைய நதிகள் வந்தேறிய நதிகள் தான்.
பாலா
அதிர்ச்சியாக இருக்கிறது - இந்த அளவு அலட்சியம், பொறுப்பின்மை இருக்கிறதா என்று;
ஒரு சந்தேகம். நிரம்பித் தளும்பி நின்ற ஸ்ரீசைலம் அணையை எப்படி திறந்து விடாமல் இருக்க முடியும்? அணை உடைந்திருந்தால்?
கட்டுரை பற்றி கருத்து கேட்பதால் சொல்கிறேன் - வரைபடத்துடன் (குறிப்பாக, ஸ்ரீசைலம், கர்னூல், மந்திராலயம், கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகள் போக்கு) போட்டிருந்தால் இன்னும் இலகுவாகப் புரியும்.
Whatever, a good, timely post on a bad, sad happening.
அனுஜன்யா
//தமிழ் நாட்டில் கூவம் மட்டும் தான் ஒரிஜினல் திராவிட தமிழ் நதி.ஏனைய நதிகள் வந்தேறிய நதிகள் தான்.//
:) Superappu!!
பாலபோன அரசியல் எல்லா மாநிலத்திலும்
ஆட்டிப் படைக்கின்றன. அப்பாவி மக்கள் தான்
பலிகடாஆகிறார்கள்.
நல்ல பதிவு நண்பரே
கொலுட்டி அரசியலை கி.கி.அ பிரிச்சு மேஞ்சுட்டார்..
நல்ல பகிர்வு..
/// கிருஷ்ணமூர்த்தி said...
சிலரது சுயநலத்திற்காக எத்தனை விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதைப் படிக்கும் போதே மனம் பதைக்கிறது. ///
கிருஷ்ணமூர்த்தி
இதுதான் நிதர்சனம்
வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி
கி அ அ அனானி
கோவி கண்ணன்
///:)
இங்கே மட்டும் ஏன் 'எல்லாம் (அ)வன் செயல்' என்று எழுதுவதற்கு முடிவதில்லை ?///
தத்துவ விசாரம் செய்யலாம்தான் :) ஆனால் இந்தப் பதிவு அது பற்றி அல்ல என்பதால் ஸ்மைலியுடன் வருகைக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் :)
பாலா ஐயா :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கி அ அனானி
அனுஜன்யா,
//ஒரு சந்தேகம். நிரம்பித் தளும்பி நின்ற ஸ்ரீசைலம் அணையை எப்படி திறந்து விடாமல் இருக்க முடியும்? அணை உடைந்திருந்தால்? //
கிட்டத்தட்ட அந்த நிலைக்குப் போன பின்னர்தான் திறந்து விட்டிருக்கிறார்கள். அணை உடைந்திருந்தால் ஸ்ரீசைலம் சுற்றியுள்ள ஊர்கள் நாசமாகியிருக்கும் என்றுதான் அங்குள்ளவர்கள் எல்லோருக் கொதிக்கிறார்கள்.
///வரைபடத்துடன் (குறிப்பாக, ஸ்ரீசைலம், கர்னூல், மந்திராலயம், கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகள் போக்கு) போட்டிருந்தால் இன்னும் இலகுவாகப் புரியும்///
நல்ல கருத்து. இன்று வலையேற்றி விடுகிறேன்.
//Whatever, a good, timely post on a bad, sad happening.
//
நன்றி
கி அ அ அனானி
//venkat said...
பாழாபோன அரசியல் எல்லா மாநிலத்திலும்
ஆட்டிப் படைக்கின்றன. அப்பாவி மக்கள் தான்
பலிகடாஆகிறார்கள்.
நல்ல பதிவு நண்பரே ///
உடன்படுகிறேன்.
நன்றி வெங்கட்
கி அ அ அனானி
/// செந்தழல் ரவி said...
கொலுட்டி அரசியலை கி.கி.அ பிரிச்சு மேஞ்சுட்டார்..
நல்ல பகிர்வு..///
நன்றி செந்தழல் ரவி
என்னைக்கு என் பதிவுலக புனைப் பெயரை சரியா சொல்லுவீங்க :)
போனமுறை மிக நீளமாக (தப்பாத்தான்)ஏதோ சொன்ன மாதிரி ஞாபகம் :)
கி அ அ அனானி
அனுஜன்யா,
கி.அ.அ.அனானி அனுப்பிய ஒரு வரைபடத்தை (MAP) இடுகையில் இட்டுள்ளேன். பார்க்கவும்.
கி.அ.அ.அனானி,
நன்றி.
எ.அ.பாலா
கருத்தை ஏற்றுக்கொண்டு வரைபடத்தை போட்டதற்கு நன்றி இருவருக்கும். இன்றுதான் பார்த்தேன் பாலா.
அனுஜன்யா
டெஸ்ட்
Post a Comment